இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விளையாடும் பழக்கம் தற்பொழுது குறைந்துள்ளது. எனவே பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலையில் 15 நிமிடம் உடற்பயிற்சியும், மாலையில் 40 நிமிடம் உடற்பயிற்சியும் தினமும் அளிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும்.
12ஆம் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு முடிந்தப் பின்னர் பட்டயக் கணக்காளர் படிப்பு குறித்து அறிந்துக் கொள்வதற்காக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக 500பட்டயக் கணக்காளர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதன் மூலம் மாணவர்கள் அதிகளவில் பட்டயக் கணக்காளர் படிப்பினை தேர்வு செய்ய வாய்ப்பு ஏற்படும்.
இதேபோல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புத்திறனை அதிகரிக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று பயிற்சி பெறும் வகையில் தொழில்துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும். இதனால் 18 வயதினை நிரம்பிய மாணவர்கள் உயர்நிலைக் கல்வியை படிப்பதற்கும் உதவியாக அமையும்.
அரசுப் பள்ளியில் 4 மாணவர்களுக்கு குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு 2 ஆசிரியர்கள், ஒரு உதவியாள் என ஆண்டிற்கு 10 லட்சம் ரூபாய் செலவிட வேண்டி உள்ளது. எனவே அது போன்ற பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். மீண்டும் அந்தப் பள்ளியில் மாணவர்கள் சேர்ந்தால் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய பாடங்களுக்கும், 8ஆம் வகுப்பிற்கு அனைத்துப் பாடங்களுக்கும் இந்தாண்டு பொதுத்தேர்வு நடைபெறும் . ஆனால் மாணவர்கள் யாரும் இடைநிறுத்தம் செய்யப்படமாட்டார்கள். இந்த பொதுத்தேர்வு மாணவர்களின் திறன்களை அறிந்துக் கொள்வதற்காகத் தான் நடத்தப்படுகிறது. மாணவர்கள் அனைவரும் அந்தந்தப் பள்ளிகளிலே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக ஒரே மாதிரியான கேள்வித்தாள் தயார் செய்யப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்படும்.
மேலும் அரசுப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் பள்ளியின் மேம்பாட்டிற்கு உதவிட முன்வர வேண்டும். அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக அரசு பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் இருந்து அரசுக்கு இதுவரை ரூ. 128கோடி உதவித்தொகை இந்தாண்டு கிடைத்துள்ளது. நிதியுதவி அளிப்பதோடு மட்டுமல்லாமல் பள்ளியில் நடைபெறும் பணிகளையும் கண்காணிக்க முடியும். புதியக் கல்விக்கொள்கையின் வரைவுத் தான் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அது இன்னும் இறுதிச் செய்யப்படவில்லை. புதியக் கல்விக் கொள்கையை அரசு முழுவதுமாக ஆய்வு செய்து வருகிறது என்றார்.
இதையும் படிங்க‘5ஆம் வகுப்பிற்கு முப்பருவக் கல்வி முறை ரத்து’ - அமைச்சர் செங்கோட்டையன்: