சென்னை: ஆவடி காவல் ஆணையர் கே.சங்கர் உத்தரவின் பேரில் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரவுடிகள் வேட்டை என்ற அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இதில் சரித்திர பதிவேடு உடைய குற்றவாளிகள் மற்றும் கொலை, கொள்ளை வழக்கு, கஞ்சா போன்ற போதைப் பொருள் வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் என அனைவரின் வீடுகளுக்கும் சென்று அதிரடியாக கைது செய்தனர்.
இந்த அதிரடி ரவுடிகள் வேட்டை அதிகாலை சுமார் 3 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றதால் காவல்துறையினர் தேடிச் சென்ற அனைத்து குற்றவாளிகளும் தங்களது வீடுகளில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். இதனால் குற்றவாளிகள் எங்கும் தப்ப முடியாமல் காவல் துறையினரிடன் வசமாக சிக்கிக் கொண்டனர்.
இதில் கொலை குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் 19 பேர், கொலை முயற்சி வழக்குகளில் 3 பேர், கஞ்சா வழக்குகளில் 7 பேர், பிடி ஆணை குற்றவாளிகள் 2 பேர் மற்றும் இதர முக்கிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட 24 பேர்
பேர் என மொத்தம் 55 குற்றவாளிகளை கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவி கொலை வழக்கு; குண்டாஸில் அடைத்த கமிஷனரின் உத்தரவு ரத்து!
இவர்களை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மணலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடத்திய அதிரடி வேட்டையில், சுமார் 20 கிலோ கஞ்சா வைத்திருந்த ஜோ.பிரவீன் (22), பிரவீன் குமார் (22), பாலாஜி செல்வம் (24), செல்வம் (19) ஆகியோரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கொரட்டூர் பகுதியில் 4 கத்திகளுடன் சுற்றி திரிந்த ஜெயசீலன், அருண்பாண்டியன் ஆகிய இருவரையும் அதிரடியாக தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி ஆவடி காவல் ஆணையர் கே.சங்கர் இந்த அதிரடி நடவடிக்கை வரும் காலங்களிலும் தொடரும் என்றும், குற்ற சம்பவங்களை குறைக்க தேவையான நடவடிக்கைகள் நிச்சயமாக எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். நாட்டில் குற்றவாளிகளின் எண்ணிக்கையும், குற்ற சம்பவங்களின் தொடர்ச்சியும் அதிகரித்து வரும் நிலையில் சாதாரண மக்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில் காவல்துறையினர் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லி அவசர சட்டம்: இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு... ஆம் ஆத்மி அரசுக்கு பின்னடைவு!