சென்னை: அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் கடந்த ஆண்டு தேர்வு எழுத வராமல் இருந்த பொழுது அவர்களை கண்டறிந்து தேர்வினை எழுத வைக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருந்தது. இதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஆனால், நடப்பு ஆண்டிலும் தேர்வுக்கு பதிவு செய்த மாணவர்களில் 5 சதவீதம் பேர் தேர்வு எழுத வராமல் இருந்துள்ளனர். தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது.
முதல் நாளான இன்று மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு பள்ளிகளில் படித்த மாணவர்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 8 லட்சத்து ஆயிரத்து 744 பேர் தேர்வினை எழுதியுள்ளனர். 49,599 மாணவர்கள் தேர்விற்கு வரவில்லை. அதேபோல் தனித்தேர்வர்களாக 8 ஆயிரத்து 901 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 7 ஆயிரத்து 786 பேர் தேர்வினை எழுதியுள்ளனர்.
1,115 மாணவர்கள் தேர்விற்கு வரவில்லை. மொத்தமாக 5,0674 மாணவர்கள் தேர்விற்கு விண்ணப்பித்திருந்தும் தேர்வு எழுதவில்லை. பள்ளிகளில் படித்து மாணவர்கள் தேர்வு எழுத வராமல் இருந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனிடையே அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வேலூர் மாவட்டத்தில் 2 மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறையில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை கண்காணிக்க கல்வி தகவல் மேலாண்மை முறைமை மூலம வருகை பதிவேடுகள் பெறப்படுகின்றன .மேலும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு போன்றவை நடத்தப்பட்டது. ஆனாலும் வழக்கம்போல் நடப்பாண்டும் ஐந்து சதவீதம் மாணவர்கள் தேர்வினை எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: HSC Exam: தேர்வு நடக்கும் பள்ளியில் அரசு தேர்வு துறை இயக்குனர் நேரில் ஆய்வு!