தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை சார்பில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கிருமிநாசினி தெளித்திட 50 துரித செயல் வாகனங்களின் சேவைகளைத் தொடங்கிவைக்கும் அடையாளமாக ஏழு வாகனங்களைக் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இவ்வாகனங்களில் கிருமிநாசினி தெளித்திட தண்ணீரைப் பனித் திவலையாக மாற்றி பீய்ச்சியடிக்கும் தொழில்நுட்பம் கொண்ட கருவிகள், பேரிடர்கால மீட்புப் பணிக்காக 8 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரப்பர் இயந்திர படகுகள் ஆகியவை பொருத்தப்படவுள்ளன. கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் முடிவடைந்த பிறகு, இவ்வாகனங்கள் சென்னையின் குறுகிய சாலைகளில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் இதர கட்டடங்களில் ஏற்படும் தீயினைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை வீரர்கள் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக வான்நோக்கி உயரும் ஏணி ஊர்திகள், தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
கரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 978 பேர் பாதிக்கப்பட்டும், ஆயிரத்து 571 பேர் உயிரிழந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பத்திரப்பதிவுக்கான முன்பதிவு டோக்கனை இனி மாற்ற முடியாது - தமிழ்நாடு அரசு