பிகாரைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். ராணுவத்தில் பணியாற்றிவரும் இவர், தனது ஐந்து குழந்தையான பம்மி குமாரிக்கு கண் சிகிச்சை செய்வதற்காக, கடந்த 12ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் சென்னை வந்துள்ளார்.
சிகிச்சை முடிவடைந்த நிலையில், மீண்டும் பிகார் செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த இவர்கள் கூட்ட நெரிசலில் ரப்தி சாகர் விரைவு ரயிலில் ஏற முற்பட்டபோது, தனது குழந்தையை மறந்து தவறவிட்டுள்ளனர்.
பின்னர் இதையறிந்த மனோஜ், சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ரயில்வே நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குழந்தையைத் தேடிவந்தனர்.
விசாரணையில், குழந்தை தெலங்கானா வழியாக மும்பை செல்லும் மும்பை மெயில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியது தெரியவந்தது. இதனையடுத்து மும்பை மெயில் எக்ஸ்பிரஸ் செல்லக்கூடிய ரயில் நிலையங்களில் சென்னை ரயில்வே காவல்துறையினர் தகவலளித்துள்ளனர்.
பின்னர், ராமகுண்டா ரயில் நிலைய காவல்துறையினர் ரயிலில் தனியாக இருந்த சிறுமி பம்மி குமாரியை மீட்டு சென்னை ரயில்வே காவல் துறைக்குத் தகவலளித்தனர். பின்னர், சிறுமியை மீட்டுவர பெற்றோர்களை சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய காவலர்கள் ராமகுண்டா ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட குழந்தை நெல்லூரில் மீட்பு!