சென்னை: சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் லைசா ஜோஸ்பின் (வயது 88). இவருக்கு சொந்தமாக திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் அடுத்த கொன்னூர் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்து 544 சதுரடி கொண்ட காலி வீட்டுமனை உள்ளது.
அந்த மனையானது லைசா ஜோஸ்பினின் தந்தை வேளாங்கண்ணி என்பவரால், கடந்த 1965ஆம் ஆண்டு கிரையம் பெற்று அனுபவிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், வேளாங்கண்ணி கடந்த 1979ஆம் ஆண்டு இறந்துள்ளார். அதன்பிறகு அந்த இடம் லைசா ஜோஸ்பின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், அந்த நிலம் காலியாக இருந்ததை அறிந்த பாபு மற்றும் குருசாமி ஆகியோர், ஆள் மாறாட்டமாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வேளாங்கண்ணி என்ற பெண் ஒருவரை வைத்து போலி ஆவணம் பதிவு செய்து மோசடி செய்துவிட்டதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் லைசா ஜோஸ்பின் புகார் அளித்து இருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து ஆள் மாறாட்டம் செய்து நில மோசடியில் ஈடுபட்ட அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாபு (வயது 57), தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த குருசாமி (வயது 63) ஆகிய இருவரையும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் தாலிக் கயிற்றால் கழுத்தை இறுக்கி பெண் கொலை - கணவரை கைது செய்து போலீசார் விசாரணை!
அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகப்பன் (வயது 61), திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த முத்து (வயது 55), வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 52) ஆகியோரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, விசாரணையில் இவர்கள் ஐந்து பேரும் ஒன்றாக இணைந்து போலி ஆவணங்கள் உருவாக்கி ஆள்மாறாட்டம் செய்து, அதன் மூலம் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்தை அபகரித்தது தெரியவந்தது. பின்னர் 5 பேர் மீதும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் 2.4 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் - இரண்டு பெண்கள் கைது!