சென்னை: சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் நாள்தோறும் வந்து செல்லக்கூடிய இடங்களான அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் சுழற்சி முறையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 212 அரசு அலுவலகங்களில் பணிபுரியும் 3,394 நபர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலங்கள், வார்டு தலைமையிடம் உள்ளிட்ட 184 அலுவலகங்களில் பணியாற்றும் 1,544 நபர்கள் என மொத்தம் 4,938 நபர்களுக்கு கடந்த ஒரு வார காலத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
இதே போன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 62 மார்கெட், வணிக வளாகங்கள் உள்ள இடங்களில் கடந்த ஒரு வார காலத்தில் 8,763 வணிகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள பொதுமக்களும், வியாபாரிகளும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. மாநகராட்சி சார்பில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வரும்பொழுது பொதுமக்கள், வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை ஸ்மார்ட் சிட்டி- நகர்ப்புற ஏழைகளுக்கு பயனளிக்கிறதா?