சென்னை: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் காரணத்தினால், புத்தகக் கண்காட்சிக்கு இன்று (ஜன.8) ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், நாளை (ஜன.9) முதல் வழக்கம் போல் செயல்படும் என்றும் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
47வது சென்னை புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில், இப்புத்தகக் கண்காட்சி வரும் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த புத்தகக்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
இந்நிலையில், 900 அரங்குகள் அமைக்கப்பட்டு, நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து நூல்களுக்கும், அனைத்து அரங்கிலும் 10% கழிவு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது பபாசி தலைவர் மற்றும் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
எனவே, பொதுமக்கள் வந்து செல்வதில் ஏற்படும் சிரமங்களுக்காக இன்று (ஜன.8) ஒரு நாள் மட்டும் புத்தகக் கண்காட்சிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. நாளை வழக்கம் போல, புத்தகக் கண்காட்சி செயல்படும்" எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: '2024 நாடாளுமன்ற தேர்தல் சனாதனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையேயான யுத்தம்' - திருமாவளவன் எம்பி