சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் எனப்படும் ஊரக மருத்துவப் பணிகள் கழக அலுவலக வளாகம் உள்ளது. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட பல மருத்துவத் துறை சார்ந்த அலுவலகங்களும், 108 ஆம்புலன்ஸ், பொதுச் சுகாதாரத் துறை, காச நோய் தடுப்பு, தேசிய சுகாதாரத் திட்டம் உள்பட பல்வேறு அலுவலகங்களும் இதே வளாகத்தில் அமைந்துள்ளன.
இந்நிலையில், ஊரக மருத்துவப் பணிகள் கழக அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரியும் 45 வயது ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் ஏற்கனவே தொற்றுள்ள ஒருவருடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. அவருடன் பணிபுரிந்தவர்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இவருக்கு எந்த வழியில் தொற்று ஏற்பட்டிருக்கும் என சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரோனா தொடர்பாக தினமும் சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் இங்குதான் செய்தியாளர்களை சந்திப்பது குறிப்பிடத்தக்கது. தலைமைச் செயலரும் நேற்று இங்குதான் செய்தியாளர்களை சந்தித்தார்.