சென்னை விமான நிலையத்திலிருந்து 44 உள்நாட்டு விமானங்கள் இன்று இயக்கப்படுகின்றன. அதில் 22 விமானங்கள் சென்னையிலிருந்து டெல்லி, கொல்கத்தா, கவுகாத்தி, புவனேஸ்வா், அந்தமான், ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம், மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கு செல்கின்றன. இந்த விமானங்களில் பயணம் செய்ய சுமாா் 2,600 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனா். அதைபோல் இந்த 22 விமானங்களும் அந்தந்த நகரங்களிலிருந்து சுமாா் 1,800 பயணிகளுடன் சென்னைக்கு திரும்பி வருகின்றன.
இந்த 44 உள்நாட்டு விமானங்களில் 4,400 பயணிகள் பயணிக்க முன்பதிவு செய்துள்ளனா். நேற்று (ஜூன் 1) 5 ஆயிரம் பயணிகள் பயணம் செய்த நிலையில், இன்று பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதில் நேற்று 48 விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால் இன்று கொச்சி, விஜயவாடா, ராஜமுந்திரி, கடப்பா, சேலம் ஆகிய இடங்களுக்கு போதிய பயணிகள் இல்லாததால் 44ஆக குறைந்துள்ளது.
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விமானங்களில் நடு இருக்கையை காலியாக வைத்து தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று நேற்று விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் சென்னையிலிருந்து இன்று புறப்பட்டு செல்லும் விமானங்களில் அந்த முறையை கடைப்பிடிக்கவில்லை. இன்று காலை 5 மணிக்கு அந்தமான் சென்ற ஏா் இந்தியா விமானம் முழு அளவிலான 178 பயணிகளுடனும் காலை 7.30 மணிக்கு கொல்கத்தா சென்ற இண்டிகோ ஏா்லைன்ஸ் 180 பயணிகளுடனும் காலை 8.30 மணிக்கு ஹைதராபாத் சென்ற இண்டிகோ ஏா்லைன்ஸ் 179 பயணிகளுடனும் இருக்கைகள் இடைவெளி இல்லாமல் முழு அளவிலான பயணிகளுடன் சென்றன.
மத்திய அரசின் அறிவுறுத்தல் வரும் முன்பே பயணிகள் முன்பதிவு செய்துள்ளனா். இதனால் தற்போது உடனடியாக அதை செயல்படுத்தினால் சில பயணிகளை ஆப்லோடு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதனால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும். இனி வரும் நாட்களில் அந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும் என்று விமான நிறுவன அலுவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க..மகாராஷ்டிரா, குஜராத்தை தாக்கவரும் நிசார்கா புயல் : நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது