சென்னை ஆதம்பாக்கம் கக்கன் நகரில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, போதைப்பொருள்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுவருவதாக காவல் ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இத்தகவலின்பேரில், காவல் ஆணையர் உத்தரவின்படி ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையில் அப்பகுதியில் காவல் துறையினர் சோதனைசெய்தனர். அப்போது மண்ணடியம்மன் கோயில் தெருவில் உள்ள A,M ஸ்டோர் அருகில் சந்தேகத்திற்கிடமாக கையில் பெரிய பையுடன் நின்றுகொண்டிருந்த இரண்டு பேரை காவல் துறையினர் சோதனை செய்தபோது, அவர்களிடம் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, ஆன்ஸ் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், ஆதம்பாக்கம் கக்கன் நகரைச் சேர்ந்த சையது மீரான் (52), கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சையது முபராக் (38) எனத் தெரியவந்தது.
மேலும் விசாரணையில் பெருங்களத்தூரைச் சேர்ந்த முருகன் (48) என்பவர் கர்நாடக மாநிலத்திலிருந்து மினி வேன் மூலமாக குட்கா, போதைப்பொருள்களை கொண்டுவந்து அவருக்குச் சொந்தமான வேளச்சேரி பவானி நகரில் உள்ள குடோனில் பதுக்கிவைத்து, தங்களிடம் சென்னை புறநகர் பகுதி முழுவதும் உள்ள பங்க் கடைகள், இளைஞர்களுக்கு விற்பனை செய்ய சொன்னதாக ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து வேளச்சேரியில் உள்ள குடோனுக்கு சென்று 400 கிலோ குட்கா, பான்மசாலா, ஆன்ஸ் உள்ளிட்ட பொருள்களை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.
மேலும் ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக உள்ள முருகனைத் தேடிவருகின்றனர். சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள அனைத்துக் கடைகளிலும் அரசால் தடைசெய்யப்பட்டுள்ள குட்கா, ஆன்ஸ் போன்ற பொருள்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இதை முழுமையாக ஒழிக்க முடியும் என சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: எஸ்.ஐ. மீது வழக்கு தொடுத்த இளம்பெண் மீது அதிமுக பிரமுகர் சரமாரி புகார்!