சென்னை: கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை ரயிலில் கடத்துவதைத் தடுக்க போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல்துறை ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் இணைந்து ரயில் நிலையங்களில் பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை 1-ல் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வந்த ஷிவமொக்கா விரைவு ரயிலில் வந்த பயணிகளின் உடைமைகளைச் சோதனை செய்தனர். அப்போது அதில் ஒரு பயணியின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது உடைமைகளை காவல்துறை சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவரது உடைமையில் இருந்து 40 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் சேதமடைந்த வைர நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் நடத்திய விசாரணையில் பயணியின் பெயர் கோபால் என்பதும், பையில் எடுத்துவந்த பணம் மற்றும் நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து பணம் மற்றும் நகைகளைப் பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்புப் படை காவல்துறை, கோபாலை ஆர்.பி.எஃப் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விசாரணைக்குப் பின் ரொக்கப் பணம் மற்றும் நகைகளுடன் பயணியை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பூட்டை உடைத்து போன் திருட்டு - மூட்டை கட்டி திருடியவருக்கு போலீஸ் வலைவீச்சு