மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 17ஆம் தேதி 21 வயதுடைய இளைஞர் ஒருவர் அயர்லாந்து நாட்டிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்ததாகவும், அவருக்கு அங்கு வெப்ப பரிசோதனை செய்ததில் கரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து, சிகிச்சைக்காக நேற்று ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அங்கு பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு இன்று கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு நலமுடன் இருப்பதாகவும் ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று தற்போது இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஒன்றுக்கும் அதிகமான நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை வரை தமிழ்நாட்டில் ஒருவருக்கு மட்டுமே இந்தத் தொற்று இருந்துவந்தது. இன்று அந்த எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
முதலில் ஓமன் நாட்டிலிருந்து வந்த 45 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது. குணமடைந்த அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இரண்டாவதாக உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து டெல்லி வழியாக வந்த இருபது வயது இளைஞருக்கு தொற்று இருந்தது நேற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலையும் பெறுவதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31ஆம் தேதி வரை பொதுமக்கள் அதிக கூடும் அனைத்து இடங்களையும் மூட அரசு உத்தரவிட்டிருந்தது. இதேபோல பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: கரோனாவால் வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு உதவித் தொகை - ரஜினி வேண்டுகோள்