சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் அங்கு குறைந்துவிட்டாலும், மற்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக இந்தியாவில் 169 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மூன்று பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்திருந்தது.
இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. சில அதிரடி உத்தரவுகளையும் நேற்று முதலமைச்சர் பிறப்பித்தார். இதுமட்டுமில்லாமல் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தினமும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இன்று அத்துறை வெளியிட்டுள்ள தகவலில், “இன்றைய நிலவரப்படி 1 லட்சத்து 94 ஆயிரத்து 236 விமானப் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கீரினிங் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்களில் 3 ஆயிரத்து 481 பயணிகள் 28 நாள்களுக்கு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர கரோனாவுக்கான தனி வார்டில் 39 பயணிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அயர்லாந்திலிருந்து சென்னை வந்த இளைஞர் ஒருவருக்கு கரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று டெல்லியிலிருந்து சென்னை வந்த நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தொற்று உறுதிசெய்யப்பட்ட ஓமனிலிருந்த வந்த காஞ்சிபுரம் நபர் தற்போது நலம்பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் 6,000 கோழிக் குஞ்சுகள் உயிருடன் புதைப்பு?