சென்னை: தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து மோசடி செய்யும் நிறுவனங்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம், இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ், எல்வின் போன்ற நிறுவனங்கள் பொதுமக்களிடம் கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி செய்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிறுவனங்கள் அனைத்தும் மாதம் அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் வசூல் செய்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஹிஜாவு குழுமம் என்ற நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாகக் கூறி, கடந்த நான்கு வருடத்திற்கு மேலாக சுமார் ஒரு லட்சம் பேரிடம் வசூல் செய்தது தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு மாதம் கொடுக்க வேண்டிய வட்டி வராததால் முதலீட்டாளர்கள் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்களை அணுகியுள்ளனர்.
குறிப்பாக இந்தக் குழுமத்தின் தலைவராக சௌந்தர்ராஜன், மற்றும் நிர்வாக இயக்குநர், அவரது மகன் அலெக்சாண்டர் மற்றும் பல நிர்வாகிகள் சேர்ந்து பொதுமக்களிடம் பணத்தை தமிழகம் முழுவதும் வசூல் செய்துள்ளனர். முதற்கட்டமாக வசூல் செய்யும் போது பணத்தைப் பெற்றவர்களிடம் 15% வட்டி தருவதாக ஆவணங்கள் கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள் அளித்தப் புகாரின் அடிப்படையில் இந்நிறுவனத்தின் ஏஜென்ட் நேரு என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற நிர்வாகிகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிறுவனம் செயல்பட்டு வந்த இடங்களிலும் நிர்வாகிகள் வீட்டிலும் விரைவில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள உள்ளனர்.
சோதனையின் அடிப்படையில் கிடைக்கப்பெறும் ஆவணங்கள் அடிப்படையாக வைத்து மோசடி செய்யப்பட்ட பணத்தை எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டறிய திட்டமிட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிறுவனத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் hijaueowdsp@gmail.com என்ற இமெயில் மூலமாக புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'திருடிய நகைகளை விற்று பலருக்கு உதவினேன்' - கொள்ளையனின் பகீர் வாக்குமூலம்