சென்னை: தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தீ விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 351 தீயணைப்பு நிலையங்கள் மற்றும் 3 மீட்பு நிலையங்கள் தயார் நிலையில் உள்ளன. இதில் 5 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக கடந்த ஆண்டில் 111 தீ விபத்துகள் நடைபெற்றதால், இந்த ஆண்டு அதனை தடுக்கும் விதமாக 10 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் 42 தீயணைப்பு நிலையங்கள் தயார்படுத்தப்பட்டு, ஃபயர் கமெண்டோ 125 பேர் உட்பட 1200 தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் தீ விபத்து ஏற்படக்கூடிய 66 இடங்களை தீயணைப்புத்துறையினர் அடையாளப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக தியாகராய நகர், வண்ணாரபேட்டை, கோயம்பேடு, பூக்கடை உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளிலும், குடிசைப் பகுதிகளிலும் தீ விபத்து ஏற்பட கூடிய பகுதி என சென்னை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் உயர் மாடிக் கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் பொது மக்களை உடனடியாக காப்பாற்ற சென்னை முழுவதும் 5 வானுயர் ஊர்திகள் மற்றும் தீ விபத்து காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள 7 அவசரகால ஊர்திகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 25 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டதாகவும், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கனமழை - மெட்ரோ ஏரிகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்