ஆவடியில் உள்ள மளிகை, பெட்டிக் கடைகளில் குட்கா பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக அம்பத்தூர் காவல் துறை துணை ஆணையர் தீபா சத்யனுக்கு புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து, அவர் விடுத்த உத்தரவின்பேரில் எஸ்.ஐ விஜயகுமார் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ஆவடி, திருமலைராஜபுரத்தில் உள்ள இனிப்பு கடையில் குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, தனிப்படையினர் நடத்திய சோதனையில் 150 கிலோ எடையுள்ள குட்கா பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பொருள்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், கடையின் உரிமையாளரான மகேந்திரகுமாரை (34) கைது செய்தனர்.
மேலும், ஆவடி, மிட்டனமல்லி, பாலவேடு மெயின் ரோட்டிலுள்ள மளிகைக் கடையில் குட்கா பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கிருந்த 200 கிலோ எடையுள்ள குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும், கடையின் உரிமையாளர் பொன்ராஜை (34) கைது செய்தனர். பின்னர், தனிப்படை காவல் துறை பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, மற்றும் இரு வியாபாரிகளையும் ஆவடி, மிட்டனமல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குட்கா பொருள்கள் எப்படி கிடைத்தது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.