சென்னை: துபாயிலிருந்து நேற்று (அக்டோபர் 14) சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் வழக்கம்போல் பயணிகளை சுங்கத் துறை அலுவலர்கள் கண்காணித்துவந்தனர்.
இந்நிலையில் 28 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் அலுவலர்களின் சோதனையில் சிக்காமல் வெளியே செல்ல முயன்றனர். இத்தகைய செயலால் இளைஞர்கள் மீது சுங்கத் துறை அலுவலர்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.
ஆகையால் அவர்கள் இருவரையும் நிறுத்தி, அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இரு இளைஞர்களும் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியதால், அவர்களது உடமைகளைச் சோதனை செய்தனர்.
சோதனையின்போது உடமைகளில் ஏதும் இல்லாததால், அவர்கள் இருவரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்துள்ளனர். அதில் ஒருவரின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்துவைத்து இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும் மற்றொருவர் பெல்ட் கொக்கியில் தங்கத்தை கடத்திவந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.
இவர்கள் இருவரிடமிருந்தும் சுமார் 14 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 343 கிராம் தங்கத்தினை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர். மேலும் இது தொடர்பாக இருவரிடமும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.