சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று காலை புறப்பட தயாரான நிலையில், பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து, அவர்களது உடைமைகளை சோதனையிட்டனர்.
அப்போது ஆலந்தூரை சேர்ந்த முகமது ஷாருக்கான் (28) என்பவர் விமானத்தில் துபாய்க்கு, சுற்றுலா பயணியாக செல்ல வந்திருந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
இதையடுத்து பயணி முகமது ஷாருக்கானின் உடைமைகளை சோதனையிட்டனர். அவர் சூட்கேசுக்குள் மறைத்து வைத்திருந்த மொத்தம் ரூபாய் 34.76 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் உட்பட வெளிநாட்டு கரன்ஸிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர்.
அதோடு அவரை கைது செய்து, மேலும் விசாரணை நடத்தினர். மற்றொருவர் கொடுத்து அனுப்பிய பணத்தை முகமது ஷாருக்கான் எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து முகமது ஷாருக்கானிடம் இந்த பணத்தை கொடுத்து அனுப்பியவர் யார் என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சற்றே குறைந்தது தங்கம் விலை!