தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க கவுரவத் தலைவர் நடராஜன், சங்கத் தலைவர் அப்சல் பர்வீன் கூறியதாவது, 'தமிழ்நாட்டில் 3,000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, அனைத்து போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மார்ச் 20ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டன. ஒரு மாதத்துக்கும் மேலாக, ஒரு பேருந்துக்கு மாதத்திற்கு, 6 லட்சம் ரூபாய் என்ற வகையில், 180 கோடி ரூபாய் வரை, வசூல் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மே 3ஆம் தேதி வரை, இன்னும் 70 கோடி ரூபாய் சேர்த்து, 250 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும். மீண்டும் பேருந்துகளை இயக்கத்துக்குக் கொண்டு வர, 50 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும்.
ஏப்ரல் தொடங்கி, ஜூன் வரையிலும், தீபாவளி, பொங்கல் காலத்தில் கிடைக்கும் வருவாயைக் கொண்டும் தான், ஆண்டு முழுவதும் பேருந்துகளை இயக்கி வருகிறோம்' எனக் கூறியுள்ளனர்.