சென்னை: கரோனா தொற்று ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறுது. நான்கு மாதங்களுக்கு பின்னர் கடற்கரைகள் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று (ஆக.23) தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 6 பேர் சுற்றிப் பார்ப்பதற்காக மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சமாதி இருக்கும் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது அதில் மூன்று மாணவர்கள் கடலில் இறங்கி குளிக்க வேண்டும் எனக் கூறி கடலின் ஆழமான பகுதிக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது குளிக்க சென்ற பல்லாவரத்தைச் சேர்ந்த நிர்மல்குமார்(17), ஆலப்பாக்ககத்தைச் சேர்ந்த சவுரிநாதன்(17) மற்றும் தர்மராஜன்(18) ஆகிய மூன்று பேரும் எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி மாயமாகியுள்ளனர்.
இதனை அடுத்து உணவு வாங்கி வரச் சென்ற மற்ற மூன்று மாணவர்களான சாலமன், சக்திவேல். மற்றும் ஆகாஷ் ஆகிய மூன்று பேரும் அவர்களது நண்பர்கள் காணாமல் போனது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின்படி, கடலோர காவல் படையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் காணாமல் போன 3 மாணவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
கடலோரக் காவல்படையின் ஹெலிகாப்டர் மற்றும் மீட்பு படகு உதவியுடன் மாணவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். மாணவர்கள் மாயமாகி அதிக நேரமாகி விட்டதால், அவர்களை உயிருடன் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அவர்களுடன் வந்த மற்ற 3 பேரிடம் அண்ணா சதுக்கம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தப் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளதாகவும், இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்பட்டதில்லை எனவும் காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாணவர்களை உயிருடன் மீட்டுவிடும் நம்பிக்கை மீட்பு படையினர் மாலை 6.30 மணிவரையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: தற்கொலை நாடகத்தை காட்டிக் கொடுத்த இளைஞர்