சென்னை: கோயம்பேடு புதிய காலனியைச் சேர்ந்தவர் விஜயராணி (33). இவர், ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது தாயார் சரோஜா பெயரில் ஆவடி அடுத்த வெள்ளானூர் அந்தோணியார் நகரில் 2 ஆயிரத்து 400 சதுர அடி கொண்ட நிலம் இருந்தது. அதை இரண்டு பாகமாக பிரித்து தனது அக்காள் அமுலுவின் கணவர் ராமமூர்த்தி பெயரில் ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
அப்போது, விஜயராணிக்கு 15 வயதாக இருந்ததால் எனது தாயார் சரோஜாவை கார்டியனாக போட்டு மீதி நிலம் எனது பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் எனது அக்காள் கணவர் ராமமூர்த்தி, விஜயலட்சுமி என்பவர் மூலம் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் தயாரித்து எனது நிலத்தை அமுலுவின் பெயரில் செட்டில்மெண்ட் செய்து கொண்டார்.
பின்னர் அந்த நிலத்தை எனது அக்காவின் மூத்த மகன் மனோஜ் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து ஏமாற்றி விட்டார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் இந்த புகாரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர்.
பின்னர், நில மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மதுரவாயில் ஏரிக்கரை கங்கையம்மன் தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி (56). அவருடைய மகன் மனோஜ் (25) மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கீழ் நகர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி (33) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் 80 லட்சம் ரூபாயாகும்.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவால் கணவனை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி