இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து தென் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தேசிய புலனாய்வு பிரிவு காவல் துறையினர் சென்னை மண்ணடியில் உள்ள ஒருவரிடம் நடத்திய விசாரணையில், பூந்தமல்லியில் உள்ள கோல்டன் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையைச் சேர்ந்த 3 பேர் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது.
இத்தகவலின் அடிப்படையில், இலங்கையைச் சேர்ந்த 3 பேர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில், தேசிய புலனாய்வு பிரிவு காவல்துறையினர் நடத்திய தீவிர சோதனையில், அங்கு தங்கியிருந்த மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.
மேலும், இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், குடியிருப்பு பகுதியில் தேசிய புலனாய்வு பிரிவு காவல்துறையினர் திடீரென சோதனை நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.