கரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழ்நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் தினமும் ஆராயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் அரசு விதிகளை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க மண்டல ஊரடங்கு அமலாக்கக் குழு அமைக்கப்பட்டது. முதலில் ஒரு மண்டலத்துக்கு ஒரு குழு மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் (மே.13) முதல், ஒரு மண்டலத்திற்கு இரண்டு குழுக்கள் என மாநகராட்சி அறிவித்தது.
இந்த நிலையில் இந்தக் குழுவினர் மக்கள் முகக் கவசம் அணிந்திருக்கிறார்களா, கடைகளில் தகுந்த இடைவெளியை பின்பற்றுகிறார்களா, அரசு அறிவித்த நேரத்தை கடைக்காரர்கள் பின்பற்றுகிறார்களா என்று கண்காணித்து, தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு விதிமுறைகளை மீறும் தனிநபர், கடைக்காரர்களிடம் இருந்து அபராதம், சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மே 6 தேதி முதல் நேற்று (மே 14) வரை என மொத்தம் 28 லட்சத்து 83 ஆயிரத்து 100 ரூபாய் ஊரடங்கு அமலாக்கக் குழுவினரால் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக வளசரவாக்கம் மண்டலத்தில் 42 கடைகளுக்குச் சீல் வைத்து, மூன்று லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இது தவிர்த்து மண்டல அலுவலர்களாலும் அபராதம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் அரசு அறிவித்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என மொத்தமாக ஒரு கோடியே 44 லட்சத்து 46 ஆயிரத்து 490 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!