சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது, அபுதாபியிலிருந்து பக்ரைன் வழியாக சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்த தேனியை சேர்ந்த அகமது கபீர்(44) என்பவரை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அலுவலர்கள் நிறுத்தி விசாரனை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
இதையடுத்து, அவரது உடமைகளை சோதனை செய்ததில், எமர்ஜென்சி விளக்கு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவற்றை பிரித்து பார்த்தபோது, 23 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ. 1 கோடியே 11 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 680 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, அதே விமானத்தில் வந்த கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் ஜலீல் (29) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது எலக்ட்ரானிக் ஜூஸ் தயாரிக்கும் கருவி இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் தங்க தகடுகள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இவரிடமிருந்து ரூ. 18 லட்சத்து 11 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் கைப்பற்றினார்கள்.
அதேபோல், துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த சர்புதீன்(23) என்பவரது உடமைகளை சோதனை செய்யும்போது உணவு தயாரிக்க பயன்படும் எலக்ட்ரானிக் குக்கர் இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இவரிடமிருந்து ரூ. 25 லட்சத்து 22 ஆயிரம் மதிப்புள்ள 610 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
இதையடுத்து, விமான நிலையத்தில் ஒரே சமயத்தில் மூன்று பேரிடமிருந்து ரூ. 1 கோடியே 54 லட்சத்தி 33 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 726 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: விமான நிலையத்தில் வெடிகுண்டு - வெடிக்க வைத்த அலுவலர்கள்!