சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் பணிபுரிபவர் கிஷோர். இவர் திருமணமான வதனி என்பவருடன் சில நாள்களாக தொடர்பில் இருந்துள்ளார். ஆனால், திடீரென்று தன்னுடன் வேலை பார்க்கும் சுபாஷினி என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த வதனி தனது தோழிகளின் உதவியை நாடியுள்ளார்.
சென்னை பாடியில் அழகு நிலையம் வைத்திருக்கும் வதனியின் தோழி முத்துலட்சுமி, காவலர் உடையணிந்து அப்பெண்ணை மிரட்டப்போவதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக நேற்று காலை வாடகை கார் ஒன்றை எடுத்துக்கொண்டு, இரண்டு பெண்களுடன் கிண்டி ரயில் நிலையத்திற்கு முத்துலட்சுமி வந்துள்ளார்.
வழக்கம்போல் வேலைக்கு வந்த சுபாஷினிடம், விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி இரண்டு பெண்கள் சுபாஷினியை வலுக்கட்டாயமாக இழுத்துள்ளனர். இதில் பயந்து சுபாஷினி கூச்சலிட்டதால், பொதுமக்களும் ரயில்வே காவலர்களும் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முயன்ற நபர்களைத் துரத்திப் பிடிக்க முடியாமல் போனது. ஆனால், அப்பெண்களை காரில் அழைத்து வந்த கார் ஓட்டுநர் ஜீவானந்தம் காவல் துறையிடம் சிக்கிகொண்டார்.
இதனையடுத்து, சுபாஷினி சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் காவல் துறை நடத்திய விசாரணையில், 'அப்பெண்களை காவலர்கள் என்று நினைத்துதான் ஏற்றிவந்தேன்' எனக் கூறியுள்ளார். இதனையடுத்து ஜீவானந்தம் கொடுத்த தகவலின் அடிப்படையில் மூன்று பெண்களையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் தனது தோழி வதனிக்காக அப்பெண்ணை கடத்தி மிரட்ட திட்டமிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து போலி பெண் காவலர்கள் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'வெங்காயத்தால் பாஜக ஆட்சிக்கு ஆபத்து' - அக்கறைப்பட்ட திருநாவுக்கரசர்