சென்னை அருகே தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் "கிரெடாய்" அமைப்பின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பினர் பங்கேற்று கண்காட்சி குறித்து விவரித்தனர். இதில் "ஃபேர்புரோ 2023"-ன் பிராண்ட் அம்பாசிடர் ஆக உள்ள நடிகை பிரியா பவானி சங்கர் கலந்து கொண்டார்.
அதில் பேசிய கிரெடாய் சென்னை மண்டல தலைவர் சிவகுருநாதன்: 'இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்கங்களின் கூட்டமைப்பின் சென்னை மண்டலம் அதன் வருடாந்திர சொத்து மற்றும் ரியல் எஸ்டேட் கண்காட்சியின் 15ஆவது ஆண்டு "ஃபேர்புரோ 2023" கண்காட்சியை பிப்ரவரி 17 முதல் 19ஆம் தேதி வரை 3 நாட்கள் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்துகிறது. இரண்டாவது நாள் கண்காட்சியை 18ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த கண்காட்சியில் 70-க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் தங்களின் பல்வேறு பிரிவுகளின்கீழ் உள்ள 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொத்துகளை ரூ.20 லட்சம் முதல் 10 கோடி வரையான மதிப்பீட்டில் காட்சிப்படுத்த உள்ளன.
இங்கு வந்து சொத்துக்களை வாங்குபவர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படும்' என கிரெடாய் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
'வீடு வாங்குபவர்கள், ரியல் எஸ்டேட் துறை முதலீட்டாளர்கள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் போன்றவற்றிற்கு இந்த கண்காட்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
மேலும், இந்த கண்காட்சிக்கு முன்னதாக பிப்ரவரி 10 முதல் 12 வரை மூன்று நாட்கள் சென்னை தியாகராய நகரில் உள்ள விஜயா மஹாலில் வீட்டுக் கடன் மேளா நடத்தப்பட உள்ளது. வீடு வாங்க விரும்புபவர்கள் வீட்டுக் கடன் தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஃபேர்புரோ 2023 ஒருங்கிணைப்பாளர் க்ருதிவாஸ், 'இந்த கண்காட்சியானது வணிக நிறுவனங்களுக்கு இடையிலான வர்த்தகத்திற்கும், வணிக நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதிலும் சிறந்த பங்கு வகிக்கும். கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு நல்ல வரவேற்பைப் பெறும்' என நம்புவதாகக் கூறினார்.
மேலும், 'இந்த ஆண்டு கண்காட்சியில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, எல்.ஐ.சி ஹவுஷிங் பைனான்ஸ் லிமிடெட், ஹெச்டிஎஃப்சி வங்கி, கனரா வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட வங்கிகள் பங்கேற்கின்றன' எனத் தெரிவித்தார்
இதையும் படிங்க:ஈரோடு இடைத்தேர்தலில் பின்வாங்கிய அமமுக.. டிடிவி தினகரன் கூறிய காரணம் என்ன?