சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்ல வேண்டிய ஃகோ ஏர்லைன்ஸ் விமானம் இன்று பகல் 1:45 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டும். இந்த விமானத்தில் சென்னையில் இருந்து மும்பை செல்ல 128 பயணிகள் அனைவரும் போர்டிங் பாஸ் வாங்கி விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர். பயணிகளை விமானத்தில் ஏற்றுவதற்கு முன்னதாக விமானத்தின் இயந்திரங்களை விமானி சரிபார்த்தார். அப்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை தெரிந்து கொண்டார்.
இந்த நிலையில் விமானத்தை இயக்கினால் ஆபத்து என்பதை உணர்ந்த விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதை அடுத்து விமான பொறியாளர்கள் விமானத்தை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் விமானத்தின் பழுது பார்க்கும் பணி நிறைவடையாததால் விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவித்தனர். மீண்டும் மாலையில் மும்பை செல்லும் விமானம் ரத்து. நாளை தான் புறப்பட்டு செல்லும் என்று அறிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விமான பயணிகள் விமான நிறுவன அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், பயணிகளின் பாதுகாப்புக்காக தான் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானம் நாளை மும்பை செல்லும். விமானம் புறப்படும் நேரம் பயணிகளுக்கு தனித்தனியே அறிவிக்கப்படும். அவசரமாக செல்ல வேண்டிய பயணிகள், தங்கள் விமான டிக்கெட்டுகளை, வேறு விமானத்திற்கு மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தனர்.
இதை அடுத்து பயணிகள் சமாதானம் அடைந்தனர். பெரும்பாலான பயணிகள் நாளை பயணிப்பதாக கூறிவிட்டு, வீடுகளுக்கு சென்றனர். அவசரமாக செல்ல வேண்டிய சில பயணிகள் தங்களுடைய விமான டிக்கெட்டை இன்று மும்பை செல்லும் மற்ற விமான நிறுவனத்திற்கு மாற்றிக் கொண்டனர். இதற்கிடையே இன்று பிற்பகல் 2:25 மணிக்கு சென்னையில் இருந்து சீரடி செல்லும் விமானமும், இன்று மாலை 6:30 மணிக்கு சீரடியில் இருந்து சென்னை வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானமும் இன்று, திடீரென ரத்து செய்யப்பட்டன.
இந்த விமானத்தில் பயணிக்க போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்து இருந்த பயணிகளை மாற்று விமானங்களில் பயணிப்பதற்காக டிக்கெட் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த தகவல்கள் பயணிகளுக்கு தனித்தனியே ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டதாகவும், விமான நிறுவனம் அறிவித்தது. ஆனாலும் சென்னை விமான நிலையத்தில் இயந்திர கோளாறு காரணமாக ஒரு விமானமும் போதிய பயணிகள் இல்லாததால், இரண்டு விமானங்களும் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: "மக்களை தவறாக பேசும் அமைச்சர்களை ஸ்டாலின் தைரியமாக கண்டிக்க வேண்டும்" - டிடிவி தினகரன்