சென்னையில் ஆவடி அருகே கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (49). இவர் மாடுகளை வைத்து பால் கறந்து விற்பனை செய்துவருகிறார். இவர் வழக்கம்போலவே, பால் கறந்துவிட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு வீட்டிலிருந்து அனுப்பியுள்ளார்.
இதற்கிடையில், அதிகாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. இதன் காரணமாக, கோவில்பதாகை பிரதான சாலை, பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் உள்ள மின் கம்பத்திலிருந்து வயர் அறுந்துள்ளது.
இந்த வயர் சாலை ஓரமாகப் பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் விழுந்து கிடந்துள்ளது. இதனை அறியாத வெங்கடேசனின் மூன்று மாடுகளும் நீரில் இறங்கியுள்ளன. அப்போது, பாய்ந்த மின்சாரத்தில் மூன்று மாடுகளும் துடிதுடித்து உயிரிழந்தன.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மாடுகளை மீட்டு உடற்கூறாய்வுக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: பெண்ணை கரண்டியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது