சென்னை: நெற்குன்றம் நேதாஜி நகர்ப் பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவர், கடந்த மாதம் 28ஆம் தேதி 19 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதேபோல கடந்த மாதம் 26ஆம் தேதி, நெற்குன்றம் மகாகவி பாரதி நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, கபிலர் தெருவைச் சேர்ந்த கோபிநாத் ஆகியோர் தங்களது இருசக்கர வாகனங்களைக் காணவில்லை என அதே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தனிப்படை அமைப்பு
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்தனர். இந்நிலையில் நெற்குன்றம் தனலட்சுமி நகர், நாயக்கர் தெருவைச் சேர்ந்த தீனா, ஊரப்பாக்கம் - காரனைப்புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த அஸ்லாம், பாரதியார் நகரைச் சேர்ந்த கமலேஷ் ஆகிய மூன்று பேரை சந்தேகத்தின்பேரில் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
உல்லாச வாழ்விற்கு திருட்டு
விசாரணையில் அவர்கள் உல்லாச வாழ்விற்கு நகைகள் மற்றும் இருசக்கர வாகனங்களைத் திருடியதாக ஒப்புக் கொண்டனர்.
அவர்களிடமிருந்து 19 சவரன் தங்க நகைகள், இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தின் முன்னிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: வாணியம்பாடியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது!