சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் தனது காரில் காஞ்சிபுரம் பகுதிக்குச் சென்று சட்டவிரோதமாக மதுபானங்களை வாங்கி வந்து தேனாம்பேட்டை பகுதியில் கூடுதல் விலைக்கு விற்று வந்துள்ளார். இவரிடமிருந்து ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் (31), மாணிக்கம் (49) ஆகியோர் சுமார் 92 மதுபான பாட்டில்களை வாங்கி ஆட்டோவில் கடத்தி வந்து ஆர்.கே. நகர், சிருங்கேரி மடம் ஆகிய இடங்களில் விற்று வந்துள்ளனர்.
இதுதொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சட்டவிரோதமாக மதுபானம் விற்ற அலெக்ஸ், மாணிக்கம் ஆகியோரைக் கைது செய்தனர். மதுபாட்டில்கள் கடத்த பயன்படுத்தப்பட்ட ஆட்டோவின் ஓட்டுநர் மனோகரன் (56) என்பவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், இதேபோல் பாண்டியனிடம் இருந்து விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரிச்சர்ட் என்பவரும் மதுபானங்களை வாங்கிச் சென்றதும் தெரியவந்தது. இதனால் அபிராமபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பாண்டியன், ரிச்சர்ட் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை!