சென்னைக்கு வேலை தேடி வரும் இளம்பெண்களிடம் திரைப்படம், சீரியல்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், தனியார் நிறுவனங்களில் வேலை பெற்றுத் தருவதாகவும் கூறி, குடியிருப்பு, மசாஜ் சென்டர் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வரும் நபர்களை காவல் துறையினர் சமீபத்தில் கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று (அக்.16) அண்ணா நகர் கிழக்கு மெயின் ரோட்டில் உள்ள வீட்டில், பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாக அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாலியல் தொழில் நடைபெற்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அத்தொழிலில் ஈடுபட்டு வந்த அண்ணா நகரைச் சேர்ந்த மகேஷ் (வயது 34), பெரியமேட்டைச் சேர்ந்த சந்துரு (வயது 29) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த மூன்று பெண்களை காவல் துறையினர் மீட்டனர். அதேபோல், அண்ணா நகர் கிழக்குப் பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது பாலியல் தொழில் நடத்தி வந்த 39 வயது பெண்ணைக் கைது செய்து, இரண்டு பெண்களை மீட்டனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீது காவல் துறையினர் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் சிறையில் அடைப்பு