சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அலுவலர்களுக்கு உத்தரவிடக்கோரி சுரேஷ் கிருஷ்ணா என்பவர் 2002ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ சிறப்பு அலுவலராக வழக்கறிஞர் மோகனை நியமித்து, சம்மந்தப்பட்ட கடலோர பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு அலுவலர் மோகன் தாக்கல் செய்த அறிக்கையில், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியுள்ளதாக ஆயிரத்து 568 பேருக்கு விளக்கம் கேட்டு இரண்டு கட்டங்களாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதில், 292 பேர் கடல் பகுதியில் இருந்து 200 மீட்டருக்குள் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியிருப்பதாகவும், அலுவலர்கள் துணையோடு வழங்கப்பட்ட குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகளை உடனே துண்டிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு கடலோர மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோகரன், கடலோர ஒழுங்குமுறை மண்டலம் விதிகள் இரண்டின் படி 2009-11ஆம் ஆண்டில் கட்டடம் கட்டவும், திட்ட அனுமதியும் வழங்கப்பட்டது. மண்டலம் ஒன்று மற்றும் மூன்றில் கட்டுமானங்கள் கட்ட தொடர்ந்து தடை நீடிப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், செங்கல்பட்டு மாவட்டம் உத்தண்டியில் இருந்து மகாபலிபுரம் வரையான 25 கி.மீ. தூரத்தில் விதியை மீறி எவ்வளவு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி, கடலோர ஒழுங்கு முறை மேம்பாட்டு ஆணையம், நகர்புற மேம்பாட்டுத்துறை அலுவலர்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆட்சியர்கள், காவல்துறை சிறப்பு கண்காணிப்பாளர் உதவியுடன் நேரில் சென்று ஆய்வு நடத்தி ஏப்ரல் 2ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.