தமிழ்நாடு முழுவதும் நேற்று (ஏப்.10) தேசிய லோக் அதாலத்தில் 456 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான 27 ஆயிரத்து 771 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளன.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் நேற்று ’தேசிய லோக் அதாலத்’ நடத்தப்பட்டது. இதில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு அமர்வுகளும், மதுரைக் கிளையில் நான்கு அமர்வுகளும் வழக்குகளை தீர்வுக்கு எடுத்துக் கொண்டன. மேலும், மாவட்ட, தாலுக்கா சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் 417 அமர்வுகள் வழக்குகளை தீர்வுக்கு எடுத்துக் கொண்டன.
மொத்தம் 423 அமர்வுகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குகளில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், நீதிமன்ற விசாரணைக்கு வராத வழக்குகள் என 27 ஆயிரத்து 771 வழக்குகளில் நேற்று தீர்வு காணப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த லோக் அதாலத்தில் 456 கோடியே 76 லட்சத்து 16 ஆயிரத்து 878 ரூபாய் மதிப்பிலான 27 ஆயிரத்து 771 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ராஜசேகர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக் அதாலத் என்றால் என்ன?
மக்கள் நீதிமன்றம் என்பதே ’லோக் அதாலத்’ என்பதன் பொருள். இது சமாதானம், சமரசம் ஆகியவற்றின் மூலம் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும். இந்திய நீதிமன்றங்கள், தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை, மனுதாரர்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ சமரச முறையில் தீர்வு காண மக்கள் நீதிமன்றங்களுக்கு அனுப்பலாம். மக்கள் நீதிமன்றம் குறித்து இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதிதான் முதலில் முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்ட மாணிக்கம் தாகூர்