சென்னை மாநகராட்சி அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட தாமரைப்பூங்கா காவலர் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், அங்கு வந்திருந்த பொதுமக்கள், காவல்துறையினருக்கு சத்து மாத்திரைகள், கபசுரக் குடிநீர், முகக் கவசங்களை வழங்கினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாட்டில்தான் விவசாயிகள் விளைவித்த நெல்லை அரசே நேரடியாக கொள்முதல் செய்து வருகிறது. இந்த ஆண்டு 28 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு வைத்திருந்தோம். ஆனால், இதுவரையே 27.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 4.20 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய சி.எம்.ஆர் நிதியைப் பெற தொடர்ந்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த கரோனா காலத்தில் ரேஷன் கடை ஊழியர்களின் பணி பாராட்டத்தக்கது.
பணியின் போது பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், பணியாற்றி வருபவர்களை பாதுகாப்பாக பணி செய்ய ஆலோசனை வழங்கியுள்ளோம். கரோனா பாதிப்பால் இறந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்கி வருகிறது"என்று தெரிவித்துள்ளார்.