சென்னை: நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை நேற்று (நவ.4) கொண்டாடப்பட்டது.
கரோனா பரவலைத் தடுப்பதற்காகவும், காற்று மாசுபாட்டைக் குறைக்கும் விதமாகவும் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டும் பட்டாசுகள் வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்தது.
மேலும் 120 டெசிபலுக்கு மேல் உள்ள பட்டாசுகளை வெடிக்கக் கூடாது எனவும் தெரிவித்திருந்தது.
அரசு உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
2,505 வழக்குகள் பதிவு
அந்தவகையில் தீபாவளியன்று தமிழ்நாடு முழுவதும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததாக 2 ஆயிரத்து 505 வழக்குகள் காவல் துறை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 517 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் 891 வழக்குகள் பதிவு
குறிப்பாக, சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததாக 891 வழக்குகளும், விதிகளை மீறி பட்டாசு கடைகள் செயல்பட்டதாக 250 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு இருமடங்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு தீபாவளி நாளில் 115 இடங்களில் தீ விபத்துகள் நடந்தது. இந்த ஆண்டு மழை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் காரணமாக விபத்துகள் குறைந்துள்ளது என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் தீபாவளியின்போது பட்டாசுகள் வெடித்து, தீக்காயம் ஏற்பட்டதாக 268 பேர் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாக 459 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று சென்றனர்.
இதையும் படிங்க: 50 ஆண்டுகளுக்கு மேல் தீபாவளி கொண்டாட்டம் இல்லாத கிராமங்கள்