சென்னை: ஐஐடியில் பயோடெக் பிரிவில் பி.ஹெச்டி படித்து வருபவர் ராஜானி (31). கடந்த ஜூலை 21ஆம் தேதி ராஜானியின் மின்னஞ்சலுக்கு அவரது பேராசிரியர் சஞ்சிப் சேனாதிபதி பெயரில் மின்னஞ்சல் வந்துள்ளது.
அதில் அவசரமாக தனக்கு பரிசுக் கூப்பன் வேண்டும், அதை வாங்கி அனுப்புமாறு கூறப்பட்டிருந்தது.
பேராசிரியர் என நம்பி ஏமாற்றம்
தனது பேராசிரியர் தானே கேட்கிறார் என்று இதனை நம்பிய ராஜானி முதலில் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து பரிசுக் கூப்பனை வாங்கி அனுப்பியுள்ளார். பின்னர் இதேபோல் தொடர்ந்து நான்கு முறை பரிசுக் கூப்பன் கேட்டதால், ராஜானி 25 ஆயிரம் ரூபாய் வரை வாங்கி அனுப்பியுள்ளார்.
மீண்டும் பரிசக் கூப்பன் மூலமே பணம் கேட்டதால் சந்தேகமடைந்த ராஜானி பேராசிரியரை தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் எந்த பரிசு கூப்பனும் கேட்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராஜானி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது தான் போலி மின்னஞ்சல் முகவரி மூலம் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.
இந்தச் செயலைச் செய்த அடையாளம் தெரியாத நபர் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினரின் உதவியுடன் கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை வழக்கு