சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாநில ஒதுக்கீட்டின்கீழ் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்குழு நடத்தி வருகிறது. நடப்பாண்டில் ஜனவரி 27ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. அரசுப்பள்ளி மாணவர்கள், சிறப்புப்பிரிவினருக்கு நேரடியாகவும், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் ஜனவரி 30ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்குழுவின் செயலாளர் வசந்தாமணி கூறுகையில், "மாநில ஒதுக்கீடு இடங்களில் எம்பிபிஎஸ் படிப்பில் இடங்கள் எதுவும் காலியாக இல்லை. தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரிக்கு கூடுதலாக 50 இடங்கள் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளன. அதில் 25 இடங்களும், தனியார் மருத்துவக்கல்லூரியில் காலியாக உள்ள 15 இடங்கள் என 40 எம்பிபிஎஸ் இடத்திற்கும், அரசு பல் மருத்துவக்கல்லூரியில் காலியாக உள்ள 7 இடங்கள், தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் காலியாக உள்ள 249 இடங்கள் என மொத்தம் 296 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு மாப்-அப் கலந்தாய்வு நீடிக்கப்பட்டு (Mop Up Counselling) மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். இந்த 296 இடங்களை நிரப்புவதற்கும் கலந்தாய்வு நடைபெறும். அதன் பின்னரும் காலியாக இடங்கள் இருந்தால் அவற்றை ஏற்கெனவே விண்ணப்பித்த மாணவர்களை கொண்டு நிரப்பப்படும்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நடப்பாண்டில் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. தேசிய அளவிலான மருத்துவ மாணவர்கள் சேர்க்கை முடிந்தபின்னர்தான் மாநில அளவில் கலந்தாய்வு முடிந்ததற்கான தேதியை அறிவிப்பர். அதன்படி கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 7,876 மாணவர்கள் சேர்க்கை - முதலமைச்சர் ஸ்டாலின்