சென்னை: தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் அடிப்படையில் சட்ட விரோதமாகப் போதைப்பொருள் விற்பனை செய்வது தொடர்பாகச் சிறப்புச் சோதனை இம்மாதம் 6ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.
இந்த சோதனையில் 2,000 கிலோ கஞ்சா மற்றும் 21 கிலோ ஹெராயின் என மொத்தமாக ரூ.23 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக 838 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், உரிய அனுமதியின்றி போதை தரும் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் உணவு பாதுகாப்புத் துறை இணைந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மருந்தகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
மருத்துவர்களால் பரிந்துரைத்தால் மட்டுமே அளிக்கப்படும் மருந்துகளைப் போதைக்காகப் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தஞ்சாவூர், சேலம், வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் சிறப்புச் சோதனை நடைபெற்றது.
உரிய மருத்துவர் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது என மருந்தகங்களுக்கு காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த திடீர் சோதனை எதிர்காலத்தில் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி மருந்தகங்களில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டால் 10581 என்ற உதவி எண்ணிற்கும், 949810581 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் தகவல் அளிக்குமாறு பொதுமக்களைத் தமிழ்நாடு காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.