சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக சென்ட்ரல் இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் வடிவுக்கரசிக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் நேற்று (ஜூன்.29) இரவு இருப்புபாதை போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து ரயில்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை எட்டில் வந்த தன்பாத் விரைவு ரயில் பயணிகளின் உடைமைகளை இருப்பு பாதை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது ரயிலில் இருந்து இறங்கிய நபர் ஒருவர் போலீஸ் வருவதை கண்டதும் தப்பி ஓட முயற்சித்துள்ளார். அவரை பிடித்து அவரின் உடைமைகளைச் சோதனை செய்தபோது அவரது பையில் சுமார் 21 கிலோ கஞ்சா மூட்டை இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து இருப்புபாதை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது மதுரையைச் சேர்ந்த சிவகுமார் என்பதும், தென் மாவட்டங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. பின்னர் சிவகுமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கழிவறைக்கு சென்ற பெண்களை செல்போனில் படம்பிடித்த இளைஞர் கைது