சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு, விருப்ப மனு தாக்கல், வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரித்தல் எனப் பலதரப்பட்ட பணிகளில் கட்சியினர் தீவிரமாகப் பணியாற்றிவருகின்றனர்.
தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவில் தற்போதுவரை கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவுபெறாத நிலையில் இன்று அதிமுக வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியலின்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதிமுக வழிகாட்டுக் குழு உறுப்பினரும், மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சருமான ஜெயக்குமார் வடசென்னையிலுள்ள ராயபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதிமுக வழிகாட்டுக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சருமான சி.வி. சண்முகம் விழுப்புரம் மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.
அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரான எம்எல்ஏ எஸ்.பி. சண்முகநாதன் தூத்துகுடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதிமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழக இணைச் செயலாளரான எம்எல்ஏ தேன்மொழி நிலக்கோட்டை தனித் தொகுதியில் போட்டியிடுகிறார்.