தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்படும் துணை மின் நிலையங்களை பராமரிப்பதற்குத் தனியாருக்குத் தொடர்ந்து அனுமதி வழங்கி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
அண்மையில் நிவர் புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
அதனை சரிசெய்த பின்னர், தனியாருக்கு ஒப்படைக்கப்படும் துணை மின் நிலையங்கள் மீண்டும் மின்சார வாரியத்தால் பெறப்பட்டு பராமரிக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் தலைமைப் பொறியாளர் கண்ணன் (இயக்குதல், பராமரித்தல்) வெளியிட்டுள்ள உத்தரவில்,"தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், புளியந்தோப்பில் அமைக்கப்பட்ட புதிய 400/230 கே.வி துணை மின் நிலையத்தை இரண்டு ஆண்டுகளுக்கு, தினமும் மின் தடையின்றி பராமரிப்பதற்காக, தனியாருக்கு ரூ.202 கோடியே 39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு மின்சார வாரிய சட்ட விதிகளை பின்பற்றி, பராமரிப்பு பணிகளை ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் மேற்கொள்ள வேண்டும்" என, அதில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம், மதுரை மாவட்டம், சமயநல்லூர், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள துணை மின் நிலையம் ஆகியவற்றை இரண்டு ஆண்டுகள் பராமரிப்பதற்கும், இயக்குவதற்கும் தலா ரூ.93.67 லட்சத்திற்கு தனியாருக்கு விட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயர் அழுத்த மின் பாதை 300 கிலோமீட்டர் நீளத்திற்கு மூன்று ஆண்டுகள் பராமரிக்க மூன்று கோடியில் தனியாருக்கு விடுவதற்கும், தமிழ்நாடு மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது.
திருப்பத்தூரில் அமைக்கப்பட்டுள்ள 230/110 கேவி துணை மின் நிலையத்தை இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.93 லட்சத்து 67 ஆயிரத்து தனியாருக்கு ஒப்பந்தம் அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.