சென்னை: தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுபவர்கள் என 2012ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்குவதை எதிர்த்து நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும், 2018ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறையில் பணி நியமனம் செய்வதற்கு அரசாணை 149இன் படி மீண்டும் ஒரு போட்டி தேர்வினை எழுத வேண்டு என அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும், கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியர்கள் பணி நியமனம் நடைபெறவில்லை. திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் பள்ளிக்கல்வித்துறையில் பணி நியமனம் செய்வதற்கான போட்டி தேர்வு நடத்துவதற்குரிய அரசாணை 149 ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பணி நியமனத்திற்கான உச்சபட்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 58 எனவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான போட்டி தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நவம்பர் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 2013 ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கத்தினர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 10ஆண்டுகளாக பணியின்றி வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம். ஆசிரியர் தகுதித்தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு இதுவரை 40ஆயிரம் பணிநியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே வேளையில் நாங்கள் தேர்வு எழுதி வெற்றிபெற்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு 2018ஆம் ஆண்டு கடந்த கால அரசு அரசாணை 149ஐ பிறப்பித்தது. ஏற்கனவே டெட் தேர்ச்சி பெற்றவர்கள் பணிநியமனம் பெற மீண்டும் ஒரு தேர்வு எழுத வேண்டும் என ஒரு அர்த்தமற்ற அரசாணையைக் கொண்டுவந்தது.
மேலும், அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாணை 149யை இருள் சூழ்ந்த அரசாணை என்று வன்மையாகக் கண்டித்து மேலும், திமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த அரசாணை நீக்கப்படும் என்றும், 2013 டெட் ஆசிரியர்களுக்குப் பணி வழங்கப்படும் என்றும் திமுக தேர்தல் வாக்குறுதியிலும் இடம்பெறச் செய்தார். திமுக ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் எங்களுக்கு மட்டும் இன்னும் விடியல் எட்டப்படவில்லை.
எனவே, அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக திமுக ஆட்சிக் காலத்தில் 21 போராட்டங்களை முன்னெடுத்தோம். அதிலும் குறிப்பாக, கடந்த மாத இறுதியில் நாங்கள் சென்னை டிபிஐ-ல் எடுத்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது அரசாணை 149 நீக்கப்படும் என அரசு தரப்பில் சொல்லப்பட்டது. இச்சூழலில் அந்த வார்த்தையையும் தேர்தல் வாக்குறுதி 177யை காற்றில் பறக்கவிட்டு 4 தினங்களுக்கு முன்பு ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றுக் காத்திருப்பவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டி தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு எங்களுக்கு வேதனையை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. எனவே, உடனடியாக 2013 டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நியமனத் தேர்வைப் புறக்கணிக்கின்றோம் என இதுவரை 10,000க்கும் மேற்பட்ட கடிதங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ளோம். இருள் சூழ்ந்த அரசாணை என்று தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட இந்த அரசாணையைப் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும் அமைச்சரும் செயல்படுத்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டி செயல்படுவதன் உள் நோக்கம் இன்று வரை விளங்காத ஒன்றாகவே உள்ளது.
உடனடியாக தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி எங்களுக்கு அவர் அளித்த வாக்குறுதியையும் காப்பாற்றி திமுக ஆட்சியை களங்கமின்றி நடத்திட வேண்டும். மேலும், தாமதப்படுத்தினால் வரும் நாட்களில் இன்னும் தீவிரமாகப் போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதையும் தெரிவிக்கின்றோம்." எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் வருகின்ற 31 ம் தேதி சென்னையில் உள்ள கிரின்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் இல்லமான தெண்பென்னையில் டெட் சங்க நிர்வாகிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக - பாஜக பிளவு முதல் சாதிவாரி கணக்கெடுப்பு வரை.. ஈடிவி பாரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பிரத்யேக பேட்டி!