சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் திருநீர்மலை அரிமா சங்கம், மக்கள் விழிப்புணர்வு மையம், ரிதம் பவுண்டேஷன் இணைந்து சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூன்.7) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் கலந்துகொண்டு மருத்துவ உபகரணங்களை கரோனா பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ’’ திமுக தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகியும் இன்னும் வழங்கப்படவில்லை. உடனடியாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
தாம்பரம் பகுதியில் ஒரு பல்நோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டும். தற்போது, தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு கிடையாது.அடுத்த இரண்டு நாட்களில் 20 லட்சம் தடுப்பூசிகள் வர இருக்கிறது. வரும் 10ஆம் தேதிக்கு பிறகு தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்படும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாது.
சென்னை சுற்றியுள்ள ஏரிகளுக்கு நீர் வரத்து குறைந்ததால் கால்வாய்களை தூர்வார வேண்டும். மசூதிகளையும், சர்ச்சைகளையும் நிர்வகிப்பது போல் இந்து கோயில்களை, இந்து பக்தர்கள் அடங்கிய குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. தமிழ்நாட்டில் உள்ள கோவில் நிலங்களையும் துரிதமாக கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த அமைச்சர்!