சென்னை: துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் சிறப்பு விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த ஜமீன் கமல் (35) என்ற பயணி மீது அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார்.
இதையடுத்து சுங்கத்துறையினர், பயணி ஜமீன்கமலை தனி அறைக்கு அழைத்துச்சென்று முழுமையாக சோதனை நடத்தினர். அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ஒரு பார்சலைக் கைப்பற்றினர்.
அதனுள் தங்கப்பசையை மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். அந்த பாா்சலில் 1.53 கிலோ தங்கப்பசை இருந்ததைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை சுங்க அலுவலர்கள் கைது செய்தனர்.
இந்நிலையில் மேலும், இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளைச் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது மதுரையைச் சேர்ந்த அபுதாஹிர் (38) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரையும் நிறுத்தி சோதனையிட்டபோது, அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ஒரு பாா்சலில் 1.23 கிலோ தங்கப்பசையைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரையும் சுங்கத்துறை அலுவலர்கள் கைது செய்தனர்.
துபாய் மற்றும் இலங்கையில் இருந்து சென்னைக்கு 2 விமானங்களில் கடத்தி வந்த 2.76 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.1.20 கோடி.
இதையடுத்து சுங்கத்துறையினர், 2 கடத்தல் பயணிகளையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.
இதையும் படிங்க: 'சிவகார்த்திகேயன் 20' படப்பிடிப்பு காரைக்குடியில் தொடக்கம்