சென்னை: சிதம்பரத்தைச் சேர்ந்த தம்பதிக்கு ஜூன் 26ஆம் தேதி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தைக்கு இதயத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு சிகிச்சைப் பெற்று வரும் குழந்தையின் உடலில் ஆக்ஸிஜன் அளவு 70 முதல் 80 என்ற ஆபத்தான நிலையிலேயே இருந்து வருகிறது. குழந்தையைப் பிழைக்க வைக்க முடியாது என்று எண்ணி குழந்தையை டிஸ்சார்ஜ் செய்யும்படி பெற்றோர் மருத்துவர்களிடம் கேட்டுள்ளனர்.
பெற்றோர் பிடிவாதம்
இந்தச் சூழ்நிலையில் சிகிச்சையை நிறுத்தினால், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே பிடிவாதமாக இருந்த பெற்றோர், முடிவாக குழந்தை தங்களுக்கு வேண்டாம் என்று அதிகாரப்பூர்வமாக எழுதிக் கொடுத்துள்ளனர்.
தொடர்ந்து சிகிச்சை
பிறந்த போது இரண்டு கிலோவாக இருந்த குழந்தையின் எடை, இதய நோயினால், 1.6 கிலோவாக எடை குறைந்தது. குழந்தையின் எடையைக் கூட்டுவதற்காக, தாய்ப்பால் வங்கி மூலம் தாய்ப்பால் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது குழந்தையின் எடை 1.8 கிலோவாக உள்ளது. தொடர்ந்து சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது.
குழந்தை நலக் குழுமத்தில், இந்தப் பெண் குழந்தையின் விவரத்தை தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், முழுமையான சிகிச்சைக்குப் பின், அரசு இல்லத்தில் குழந்தையை முறையாக ஒப்படைக்க உள்ளது.
இதையும் படிங்க: கிணற்றில் மிதந்த பச்சிளம் குழந்தையின் உடல் மீட்பு