சென்னை பெரிய மேடு நடராஜா திரையரங்கம் பேருந்து நிலையம் கண்மணி பெட்ரோல் சேமிப்பு நிலையம் அருகே காவல் துறையினர் நேற்று (ஏப். 12) காலை முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்துவந்தனர்.
அப்போது, அவ்வழியாக வடமாநிலத்தவர் ஒருவர் முகக்கவசம் அணியாமல் நடந்துசென்றார். காவலர்கள் அந்த நபரை அழைத்தபோது வேகமாக ஓடியுள்ளார்.
அவரது ஆடையிலிருந்து தங்கச் சங்கிலி விழுந்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரை விரட்டிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அவரது ஆடைக்குள் 2.3 கிலோ தங்கச் சங்கிலிகள், வளையல் உள்ளிட்ட ஆபரணங்களை மறைத்துக்கொண்டு சென்றது தெரியவந்தது.
விசாரணையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கிதாபுல் மண்டல் (24) என்பதும் சவுகார் பேட்டையைச் சேர்ந்த மொத்த நகை வியாபாரி நேற்று (ஏப். 11) முன்தினம் வங்கியிலிருந்து ஏழு கிலோ மதிப்பிலான தங்க நகைகளை வாங்கி அதில் 2.3 கிலோ நகைகளை பாலிஷ் போட வால்டாக்ஸ் சாலைப் பகுதியைச் சேர்ந்த நகைப் பட்டறையில் கொடுத்துள்ளார்.
அந்த நகை பட்டறை ஊழியரான பிடிபட்ட இளைஞர் கிதாபுல் மண்டல் நகையை பாலிஷ் செய்துவிட்டு சொளக்கார் பேட்டைக்குத் திருப்பி ஒப்படைக்க எடுத்துச் சென்றபோது காவல் துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். எதற்கு காவலர் துரத்துகிறது எனத் தெரியாமல் ஓடியதால் குழப்பம் ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து நகைப்பட்டறை, மொத்த நகை வியாபாரி நகை வாங்கியதற்கும் அதைப் பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்வதற்காகவும் வைத்திருந்த உரிய ஆவணங்களைக் காவல் நிலையத்தில் காண்பித்துள்ளார்.
ஆவணங்களைச் சரிபார்த்த பெரிய மேடு காவல் துறையினர் 2.3 கிலோ தங்க நகைகளை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டுப் பிடிபட்ட இளைஞரை எச்சரித்து அனுப்பினர்.
இதையும் படிங்க: ரயிலில் தவறவிடப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு!