சென்னை துறைமுகத்திற்கு மார்ச் 19ஆம் தேதி கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அந்த லாரியை சுங்கத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். அதன்பிறகு கண்டெய்னர் லாரி திரும்ப துறைமுகத்திற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் லாரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான கண்டெய்னர் காட்சிகள் மற்றும் வண்டி எண்ணை காவல்துறையினரிடம் கொடுத்து கண்டுபிடித்து தரும்படி கூறினா்.
இதையடுத்து குன்றத்தூர் காவல்துறை ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்தனர். இதில் குன்றத்தூர், கீழ்மா நகர் பகுதியில் உள்ள ஒரு குடோனுக்கு கண்டெய்னர் லாரி வந்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுங்கத்துறை அதிகாரி சுனில்குமார் மற்றும் காவல்துறையினர், குடோனில் செம்மரக்கட்டைகள் அதிகளவில் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனிடையே குடோனில் ஐந்து டன் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பட்டிருந்ததாகவும், இதன் மதிப்பு சுமார் ரூ. 2.50 கோடி இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், செம்மரம் பதுக்கி வைத்தது தொடர்பாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரை தேடி வருகின்றனர்.