சென்னை: எண்ணூரையடுத்து அமைந்துள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று (ஆக 20) ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “எல்லோருக்கும் எல்லாம் என்ற உன்னத நோக்கத்தோடு, நமது அரசு இன்று அனைத்து மக்களுக்கும் அனைத்து திட்டங்களையும் வழங்கி நல்லாட்சி நடத்தி வருகிறது.
7 ஆண்டுக்கு பிறகு சாதனை
100 நாள்கள் நல்லாட்சி நடத்தி வருகின்ற முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி, மின்சார வாரியம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள அலகு ஒன்றில், 100 நாள்களை கடந்து தொடர் மின்சார உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது.
இந்தச் சாதனை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்றது. தற்போது 7 ஆண்டுகள் கடந்து 100 நாள்களை தாண்டி, தொடர் மின்சார உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்த உற்பத்திக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அலுவலர்களுக்கும், மின்வாரியம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நிலக்கரியில் மோசடி
இதையடுத்து நிலக்கரி இருப்பு சரிபார்க்கப்பட்டது. வடசென்னை அனல்மின் நிலையத்தில் மட்டும் ரூ.85 கோடி மதிப்பிலான 2.38 லட்சம் டன் நிலக்கரி, பதிவேட்டில் இருப்பதற்கும், நிஜத்தில் இருப்பில் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கின்றது.
நிலக்கரி காணாமல் போன விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். எனவே இந்தத் தவறிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இந்த மின்துறையில் இவ்வளவு பெரிய முறைகேடு நடந்திருப்பது ஆய்வில் தெரியவரும்போது உள்ளபடியே கடந்த அதிமுக ஆட்சியை நினைத்து வருத்தப்படுவதா, அல்லது அந்த நிர்வாக திறமையின்மையை பார்த்து வேதனைப்படுவதா? என எதுவும் தெரியவில்லை.
அந்த அளவிற்கு ஒரு மோசமான நிர்வாகம் செயல்பட்டிருக்கிறது. இதேபோல், தூத்துக்குடி, மேட்டூர் அனல்மின் நிலையங்களிலும் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆய்விற்கு பிறகு அதன் உண்மை நிலவரமும் தெரிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி முகாம் அமைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளை அணுகலாம் - ராதாகிருஷ்ணன்