தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக மால்கள், திரையரங்குகள், சாலைகள் உள்ளிட்ட இடங்களில் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் சுற்றித் திரிவோரிடம் உடனடியாக 200 ரூபாய் அபராதம் விதிக்குமாறு மாநகராட்சி அறிவித்ததையடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதத் தொகையை பெற்று வருகின்றனர்.
இதுமட்டுமின்றி வாகனங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து, அபராதத் தொகை பெற்று வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று (ஏப்.13) மட்டும் 45 ஆயிரத்து 49 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
கடந்த 8ஆம் தேதி முதல் இதுவரை முகக் கவசம் அணியாதவர்கள் மீது இரண்டு லட்சத்து 20 ஆயிரத்து 806 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. அதேபோல தனிமனித இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீதும் கடந்த 8ஆம் தேதி தொடங்கி இதுவரை மொத்தம் ஒன்பதாயிரத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கரோனாவின் இரண்டாம் அலை வேகமாகப் பரவிவரும் தலைநகர் சென்னையில், காவல்துறை சார்பில் முகக்கவசம் அணியாதவர்கள்மீது நேற்று மட்டும் ஆயிரத்து 284 வழக்குகள் பதியப்பட்டு இரண்டு லட்சத்து 56 ஆயிரத்து 800 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆம் தேதி முதல் இதுவரை முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள் மீது சென்னை காவல் துறை சார்பில் நான்காயிரத்து 874 வழக்குகள் பதியப்பட்டு ஒன்பது லட்சத்து 74 ஆயிரத்து 800 ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'அம்பேத்கரின் போராட்டம் பல தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும்!'